Pages

Subscribe Twitter Twitter

Monday, July 28, 2014









சிதறிய‌ கண்ணாடித் துண்டுகளின் முகவரிகள்...



from www.bbc.com

உடைந்த கண்ணாடித் துண்டு ஒன்றின் மீது பட்டுத்தெறிக்கும் சூரியஒளிக்கதிர்க்கீற்று ஒன்றுக்கு இருக்கும் சுதந்திரத்தை பாதுகாப்பதாக எண்ணியபடி, சற்று நேரம்முன்பு வெடித்துச் சிதறிய எறிகணையினால் சிதைந்த வாழ்விடமொன்றில் இருந்து வெளிப்பட்ட ஒரு கண்ணாடி துண்டுக்கு அபயமளித்த பாலஸ்தீனநிலம் இன்முகத்துடன் கந்தகத்தூசினை நுகருகின்றது. ஏறிகணையின் முகவரி "அவர்கள்". யாவும் கற்பனை என்று நிராகரிப்பதனையும், சத்தியம் என்று அளூத்தி உச்சரிப்பதையும் நான் விரும்பவில்லை ஆனால் நல்மனிதர்களின் மெளனம் உலகத்தில் பேரழிவுகளின் திறவுகோல். ஒடிவரும் நீரோடையின் சலசலப்பில் ஒரு மூளை நித்திரையில் இருக்கும் அவனுக்கு தெரியாமல் ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டு மும்மணினேரம் முன்பு அவ் ஓசைமீது அவன் எரிந்துவிழுந்த போது பதியப்பட்ட "ஞாபகஇழையின்" தழும்புக்கு மருந்து தடவிக்கொண்டிருக்கிறது. ஓவ்வொரு நாள் காலையின் துயில்ழெழும் வேளையிலும் அவன் அந்த ஓசையினை வெறுப்பதே இல்லை.  
உதவி என்ற செயல் ஒன்றே உலக‌ இயக்கத்திற்க்கு காரணகர்த்தாவாகின்றது என்பது எனது நிலைப்பாடு. இடைவெளியின் பின் திண்ணையில் தோற்றம்...  சிறுவயதில் "காக்கும் கரங்கள்" என்று வாசித்த ஞாபகம். எங்கும் நீக்கமற‌ நிறைந்திருந்ந்தாலும் இடதுகை அறியாமல் வலதுகை செய்வதே பெரியஉதவியாக இருக்கும் என்று நினைப்பதற்குள் எங்கிருந்தொவந்த ஒட்சிசன் நிறைந்தவாயூ என்பெருமூச்சின் சுவாசமாய் என்னுள் பரவுகின்றது. "ஏணியாயும் தோணியாயும்" உதவிசெய்யும் பலர், மெழுகுவர்தியாக உருக்கும் சிலர், ஆலைமரமாக தாங்குபவர்கள், விளைநிலங்கள் எனஎண்ணற்ற வகையில் பூமி புண்ணியம் செய்கிறது இவர்களின் பெயரால். கண்களை மூடும் இமையால் கண்ணீரை மூடமுடிவதில்லை அதுபோல் ஒவ்வொருவரும் தம் "காக்கும் கரங்களை" நினைக்கும் தருணங்களில் காரணங்களின்றி இதயம் இரைகின்றது. 
அன்னையின்கை, அன்னமிட்டகை, அரவணைத்தகை, தொட்டணைத்தகை, அந்தோ தூரத்தே மனக்கண்ணிற்குத் தெரியும் கைகள் என சிந்தை தெளிவிக்கும் நினைவுகள் ஏராளம். உதவிதான் இறைவன் என்றால் நாஙகள் அவர்ப‌டைப்பு என்று மார்புதட்டி பெருமைகொள்ள நாம் தகுதியானவர்கள் அல்லாவிடின் கடவுள் படைப்பதற்கும், நாம் படைப்பதற்க்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. கூர்ப்புக்கொள்கையின் தக்கனதான் பிழைக்கும் என்று வாதிடும்போதும் உதவிடுதல் என்றசெயல் தவிர்க்கமுடியாதது. மனிதர் செத்துச் செத்து விழுந்தாலும் அவர்காலத்தால் ஈன்றஉதவி உயிர் பெற்று உலாவருகின்றாது, அசைவாடுகின்றது, மனங்களிற்குள் ஊடுருவுகின்றது, மனம் மாற்றுகின்றது. வெள்ளிநிலவின் தண்மைக்கு, என் அதன் "ஆண்மைக்கு" கூட‌, அதன் விகாரமான வதனம்தான் காரணமோ அதுபோல் எண்ணமுயர்ந்த இடத்தில் சிறுபுன்முறுவல்கூட உயிர்காக்கும் உதவியாகின்றாது. 

உலகத்தின் நிம்மதிக்கும் உதவி தேவை... உடைந்த கண்ணாடித்துண்டுகள் ஒன்றுசேர்க்கப்பட்டு ஒரேகுழியில் புதைக்கப்படுகின்றன, கண்ணாடித் தூண்டுகளின் முகவரிகள் காலதிதின் கண்ணாடியாக‌ எதோ ஒருவகையில் உதவி தேடி. ஏன்னைத் தூண்டிய கண்ணாடித் துண்டுகளின் முகவரிகள்... MH17, Gaza Crisis, South Sudan-Food Crisis, Syria Crisis, and many more.


Monday, January 14, 2013









நாங்கள் ஏன் உபயோகிப்பதில்லை..??



நீண்ட காலத்தின் பின் திண்ணையைத் தூசி தட்டுகிறேன்.
அண்மைக்காலமாக ஒரு சந்தேகம்.

காரணம் தான் புரிகிறது  இல்லை.


அண்மையில் அலுவலகத்தில் பணியாற்றும் சீன நண்பரொருவரின் கணினியைப் பார்த்தபோது அதிர்ந்து போனேன்.உலாவி (Browser) முதற்கொண்டு எங்கெல்லாம் சீனமொழியை உபயோகப்படுத்த முடியுமோ அங்கெல்லாம் சீனமொழியை சாதாரணமாகவே உபயோகிக்கிறார்.இத்தனைக்கும் அவரது ஆங்கிலப்புலமை சிறப்பானது.அவர்களில் அனேகர் பொதுவாகவே சீனமொழியைத்தான் கணனி மொழியாக உபயோகப்படுத்துவதைப் பின்புதான் அவதானித்தேன் .
இத்தனைக்கும் Google முகப்புப் பக்கம்  ,Gmail  போன்ற இடங்களிலெல்லாம் தமிழை உபயோகப்படுத்த வாய்ப்பிருந்தும் நான் எதிலும் தமிழைப் பாவனை மொழியாகப் பயன்படுத்துவதில்லை. அறிமுகப்படுத்தப்பட்டபோது சிலகாலம் உபயோகித்திருக்கிறேன்.பின்னர் ஏனோ ஆங்கிலத்திற்கு மாற்றிவிட்டேன்.



இத்தனைக்கும் தமிழை உபயோகப்படுத்துவதைத் தரக்குறைவாக எண்ணுபவன் நான் இல்லை. போதுமான அளாவிற்குத்  தமிழ் புலமையும் எனக்கிருப்பதாகவே எண்ணுகிறேன்.இருந்தும்  ஏன் நான் (நான் மட்டுமல்ல. நம்மில் பெரும்பாலானோர்) தமிழை கணனி பாவனை மொழியாகப் பெரிதாக உபயோகப்படுத்துவதில்லை.

 இதுதான் இப்போ விடைகாண முடியாக் கேள்வியாய் எனக்கிருக்கிறது.

என்ன காரணமாயிருக்கலாம்..??







Thursday, January 19, 2012









SOPA.. நாம்.. கட்டற்ற இணையம்.


சில நாட்களாக ஊடகங்களில் பலமாக அடிபடும் சொற்கள் தான் SOPA(Stop Online Piracy Act), PIPA(PROTECTIP Act). .அமெரிக்காவிலும் ஏனைய பாகங்களிலும் இணையத்தளம் மூலம் இடம்பெறும் காப்புரிமை மீறல்களை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்க செனற்றில் நிறைவேற்ற முயலும் இரு சட்ட மூலங்கள் தான் இவை..

இந்தச் சட்டங்கள் என்ன தான் செய்யப்போகின்றன? உதாரணமாக இப்போதெல்லாம் ஒரு திரைப்படம் வெளிவந்து திரையரங்குகளில் வந்தவுடனேயே ஏன் சிலசமயங்களில் வரமுதலே இணையத்தளங்களில் இலவசமாக தரவிறக்கக் கூடியதாக செய்துவிடுகிறார்கள் அல்லவா..அதேபோல் பாடல்கள் மற்றும் இசைத்தொகுப்புகளின் நிலையும் இதே தான்.இதனையெல்லாம் தடுப்பது தான் இந்தச் சட்டங்களின் வெளிப்படையான நோக்கம்.

உதாரணமாக
  •  youtube ல் நாளந்தம் பார்த்து ரசிக்கும்  பாடல்கள், நகைச்சுவைகள்..
  •  வெளியான உடனேயே தரவிறக்கி கேட்டுவிடத்துடிக்கும் எம்மைப் போன்ற விசிறிகள்..
  •  மொழிகடந்து இலவசமாகவே Torrent உதவியுடன் தரவிறக்கி பார்த்துவிடும் பல்வேறு மொழிப் படங்கள்..
  • இலவசமாகவே தரவிறக்கிவிடும் e புத்தகங்கள்.. 

இங்கே தான் பிரச்சினை எழுகின்றது... 

இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலமான கோசங்கள் உலகெங்கும் எழ ஆரம்பித்துள்ளது. காப்புரிமையப் பேணுவது அவசியமானது என்ற அடிப்படையில் இதற்கு ஆதரவானவர்களும்,இது இறுதியில் கட்டற்ற இணையத்தைக் கட்டுப்படுத்தி சுதந்திர கருத்துரிமையை மீறுவதிலே தான் முடியும் என இத்ற்கு எதிரானவர்களின் வாதங்களும் எழ ஆரம்பித்துள்ளன.இது Wikipedia போன்ற பல இலட்சம் பார்வையாளர்களை நாளொன்றிற்குக் கொண்டுள்ள இணையத்தளாங்களின் ஒருநாள் Blackout (ஒரு வகையிலான கடையடைப்பு ;-) ) போராட்டம் வரை இதுவரை சென்றுள்ளது.

பல கோடிகளோ இலட்சங்களோ செலவுசெய்து மேலும் காப்புரிமை பெற்று தயாரிக்கப்படும் திரைப்படங்களோ இசைத்தொகுப்புக்களோ ஏனைய அம்சங்களோ சட்டவிரோ தமான முறையில் இணையத்தளங்களில் தர வேற்றப்படுவதால் அதனை வெளியிடும் நிறுவனங்களிற்கு பெருமளவு வருமான இழப்பு ஏற்படுகிறது .. இது அடிப்படையில் அந்த துறை(Industry)யையே படிப்படியாகப் பாதிக்கச் செய்கிறது.தொடர்ந்து அந்த துறையையே ஆட்டங்காணச் செய்கையில் அந்தத் துறையயே நம்பி வாழும் அன்றாடங்காய்ச்சிகளின் அடிவயிற்றில் இறுதியாகக் கைவைக்கின்றது.ஆகவே இதனைத் தடுத்தேயாக வேண்டும் என இதனை ஆதரிப்பவர்கள் வாதாடுகிறார்கள்.

ஆனால் சட்டங்கள் போட்டுத் தடுப்பதனால் எதுவும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. தொழிநுட்பங்களில் கைதேர்ந்தவர்களாலேயே இதுபோன்ற தளங்கள் நடாத்தப்படுவதால் அவர்கள் வேறுவழிகளில் இதனைக் கொண்டு செல்வார்கள். ஆனால் அடிப்படையில் பாதிக்கப்படப் போவது என்னவோ இது போன்ற காப்புரிமைபெறப்பட்ட பொருட்களைக் கட்டனங்செலுத்திப் பெறமுடியாதவர்களே எனவும் வாதாடுகிறார்கள். குறிப்பாக எல்ல நாட்டுச் சந்தைகளுக்கும் எல்லாப் பொருளும் எளிதில் வந்தடைவதில்லையெனவும், அவ்வாறான பிரதேசங்களில் வாழ்பவர்களையே இது பாதிக்கும் எனவும் வாதாடுகின்றார்கள். மாறாக இந்தச் சட்டமூலங்கள் புத்தாக்கங்களில் ஈடுபடும் சிறிய நிறுவனங்களை சட்டங்களிலுள்ள ஓட்டைகளப் பயன்படுத்தி பெரிய நிறுவனங்கள் அடிமைப்படுத்திவிடவே ஊக்குவிக்கும் எனவும் வாதாடுகிறார்கள்.

சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்க திட்டம் போட்டுத் திருடிற கூட்டம் திருடிக்கொண்டேயிருக்கும் என்பது இவர்களது  வாதம்.இதற்கு மாறாக சட்டங்களை இயற்ற செலவு செய்யும் நேரத்தையும் பணத்தையும் இவ்வாறன செயற்பாடுகளைத் தடுக்கப் புதிய தொழிநுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் செலவுசெய்வதே சிறந்தது என்கிறார்கள் இந்தச் சட்டமூலத்தை எதிர்ப்பவர்கள்.

எது எவ்வாறானாலும் இந்தச் சல்லமூலம் நிறவேற்றப்படுமா, அல்லது பல்வேறு மற்றங்களிற்கு உட்பட்டு நிறைவேற்றப்படுமா, நிறவேற்றப்பட்டாலும் எவ்வாறு அமுல்படுத்தப்படப் போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்தச் சட்டமூலங்கள் பற்றி நான் அண்மைய நாட்களில் இணையத்தில் வாசித்த ஆக்கங்களின் அடிப்படையில் மேலெழுந்தவாரியாகவே இங்கு விளக்கியிருக்கிறேன்.மேலும் படிக்க கீழுள்ள இணைப்புக்களைச் சொடுக்குங்கள்.



Tuesday, January 3, 2012









நான்.. விவாதம்.. TinTin..


அது.. முகமூடி மாயாவி எங்கள் கல்லூரி வகுப்பறைகளில் பிரபலமாயிருந்த காலம்..நாமெல்லாம் சுழற்சி முறையில் நம்மிடையே இருந்த ராணி காமிக்ஸ்களை ஒருவர் மாறி ஒருவர் பகிர்ந்து வாசித்துக் கொண்டிருந்தோம்..இதனை ஒரு வகையான பண்டமாற்று என்றே கூறலாம்.. 
சில காமிக்ஸ்கள் சுழற்சி முறையில் நம்மை வந்தடைய வாரக் கணக்கில்கூட காத்திருக்க வேண்டி இருக்கும்.இப்படி நம்ம பசங்களெள்லாம் முகமூடி மாயவி மீது வெறிகொண்டலைந்தபோது திடீரென மாணவ முதல்வர்கள் இதனை வாசிக்கக்கூடாதெனக் கூறி பெருமளவு புத்தகங்களை நண்பர்களிடமிருந்து அள்ளிச் சென்றது இப்போதும் ஞாபகம் இருக்கிறது.. ஏன்  வாசிக்கக் கூடாதெனக்கூறினார்கள் என்பதை இன்றுவரை குப்புறப் படுத்திருந்து யோசித்துப்பார்த்தாலும் எந்தக் காரணமும் புரிகிறதில்லை.பின்னர் சிலகாலம் அதனை மறைத்து வைத்து இரகசியமாக வாசித்து வந்தாலும் பழைய வெறித்தனம்.. நாட்டம் அதில் தொடரவில்லை..



பின்னர்..  எமது கல்லுரியில் விவாதம் கொடிகட்டிப்பறந்த காலம்..குமாரசுவாமி மண்டபத்தில் முன்னால் நிலத்தி உட்கார்ந்தபடி அனல் பறக்கும் விவாதங்களிற்கு கைதட்டி குதூகலித்திருந்தபோது.. நாமளும் விவாதத்தில் இறங்கினால் என்ன என ஒரு விபரீதமான நப்பாசை பிறந்தது. (எவண்டா அது பாடம் கடத்த காயாளும் உபாயங்களில் ஒன்றாகவே இவற்றிலெல்லாம்  நமக்கு நாட்டம் வந்தது எண்டு அரசாங்க ரகசியங்களைப் போட்டு உடைப்பது..). ஒரு வழியாய் முட்டிமோதி நம்மளையும் விவாத அணியிலே நம்மளையும் நம்பி இறக்கிவிட்டர்கள்.


நாமளும் ஒரு மாதிரி சமுதாய நலன் அது இதென்று விவாதங்களில் ஏதோ புகுந்து கலக்கிய/கலாய்த்துக்கொண்டிருந்தபோதுதான் நிகழ்ந்தது அந்தவிபரீதம்.ஒரு நாள் இலக்கியத் தலையங்கம்.. நமக்குத்தான் பாடப்புத்தகத்திலுள்ள தமிழ் இலக்கியம் தெரிகிறதே பெரிய விசயம்..  என்ன செய்வதென்றே தெரியவில்லை. நம்ம அணியிலே முதலில் பேசிற இரண்டு பேருமே இலக்கியம் தெரிந்தவங்கள் எண்டதால ஏதோ நமக்குத் தெரிந்த கோயில்களில் சிறுவயதில் பிரசங்கங்களில் கேட்டதெல்லாம் சேர்த்து.. அதோட எப்பவும் குறைகண்டு பிடிக்கிறதில வல்லவன் எண்டிறதாலயோ என்னமோ மூண்டாவதாய் என்னை இறக்கிறவங்கள்.. ஆக எதிரணியிலே அளவுக்கதிகமாகக் குறைகண்டுபிடித்தும், ஒரு மாதிரி எனக்கு தமிழ் இலக்கியமெல்லாம் தெரியாதெண்டிற இரகசியம் வெளியில தெரியாமல் சமாளித்து ஒருமாதிரி வென்றுவிட்டோம்..ஆனா நம்ம நடுவப் பெருந்தகை  இலக்கியக்கருத்துகளுக்கு அப்பால் வெட்டியாடி ஒரு மாதிரி வென்றுவிட்டீங்கள் என்று நம்ம குட்டை தனிப்பட்ட ரீதியில் உரையாடும் போது போட்டு உடைத்துவிட்டார்..இதனால் வீறுகொண்டெழிந்த நாம் தமிழ் இலக்கியத்தைக் கரைத்துக் குடிப்பதென்று முடிவெடுத்து நம்ம கல்லூரி நூலகத்தைத் துழைத்தெடுக்க ஆரம்பித்தோம். சிவகாமியின் சபதம், கடல்புறா என்று நம்மட இலக்கியப்பயணம்(?) சென்றுகொண்டிருக்கையில்தான் எமது நூலகத்திற்கு எதோ வெளிநாட்டுப் பழையமாணவர் சங்கத்தின் அன்பளிப்பு என்று பெருந்தொகையான ஆங்கிலப் புத்தகங்கள் வந்து சேர்ந்தது.

நாம தான் ஆங்கிலக் கதைப்புத்தகங்களின்ர பக்கமே தலை வைச்சுப் படுக்கிறதேயில்லையே..ஆனாலும் நம்ம பசங்க சிலபேர் கலர்கலராய் படங்களோட நம்ம முகமூடி மாயாவி போல புத்தகம் வாசிக்கிறத கண்டபோது ஆர்வமேலீட்டால் வாங்கிப்  படம் பார்த்து..சிறிது சிறிதாய்.. என்ர ஆங்கிலப் புத்தகம் வாசிக்கிறதில்ல எண்டிற சபத்தத்தையே முறியடிக்கச் செய்தது தான் அந்த TinTIn..
சிறிதுகாலம் நம்ம பசங்களை வெறி கொண்டலையச் செய்தது அந்தக் பல வர்ண TinTin புத்தகங்கள்..மழைக்கும் நூலகப்பக்கம் ஒதுங்காத நம்ம பசங்கள் சிலரை நூலக அங்கத்துவம் பெறச்செய்யும் அளவிற்கு நீண்டிருந்தது இந்த TinTIn வெறி.இந்தப் புத்தகங்களை எடுப்பதற்கு பலரும் முண்டையடிக்கவே ..இறுதியாக சுழற்சிமுறையிலே இந்த புத்தகங்கள் வெளியில் செல்ல்லாமல் வாசிப்பதாக முடிவெடுத்து செயலில் இறங்கினோம். அதிலும் சில குழறுபடிகள் ஏற்படவே TinTIn சில புத்தகங்களை எடுத்து வேறுஅலுமாரிகளில் யாரும் எடுத்துவிடாதவாறு ஒழித்துவைக்கத் தீர்மானித்தோம்.இதற்காக நாம் தெரிவுசெய்தது தமிழ் இலக்கியப் புத்தகங்கள் வைக்கும் அலுமாரியைத்தான்.. இப்போது நினைத்தாலும் இந்தச் சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகள் சிரிப்பைத்தான் வரச் செய்கிறது..

பின்னர் செங்கையாழியான், சுஜாதா என எமது ரசனை திரும்பிவிட்டது. அந்த ரசனை இப்போது இணையத்தில் ஏதாவது வாசித்தால் சரி அது தவிர எந்த புத்தகத்தையுமே வாசிப்பதில்லை என ஒடுங்கிவிட்டது.

TinTin வருகையோடு நான் கடற்புறா நாவலை இறுதிப் பாகத்தை வாசிக்காமலே விட்டுவிட்டேன் என்பது ஞாபகத்திற்கு வருகிறது..வாசிக்க வேண்டும் என்று தோன்றினாலும் அநேகமாக கதை மறந்தே போய்விட்டதால் முதலில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்.. ஆனால் என் இயல்பான சோம்பலைக் கடந்து நானாவது அந்த புத்தகத்தையெல்லாம் தேடியெடுத்து எல்லாப் பாகத்தையும் வாசிப்பதாவது என என் உள்மனம் சிரிக்கிறது. அநேகமாக என் உள்மனம் ஜெயித்துவிடும் போலத்தான் எனக்கும் தோன்றுகின்றது. ;-)


Tuesday, September 13, 2011









புதிய கைத்தொலைபேசியோ, மடிக் கணனியோ வாங்க வேண்டுமா..??கவலையை விடுங்கள்..

புதியதொரு கையடக்கத் தொலைபேசியோ, மடிக் கணனியோ, புகைப்படக் கருவியோ வாங்கியபின்னர் உடனடியகவே அறிமுகமாகும் புதிய மொடெலாலோ அல்லது நாம் பெருந்தொகை பணத்தைக் கொடுத்து வாங்கியவுடன் அந்தப் பொருளின் சந்தை விலையில் சடுதியாக ஏற்படும் வீழ்ச்சியாலோ கடுமையாகப் பாதிக்கப்பட்டவரா நீங்கள்..??கவலையை விடுங்கள்.

அண்மையில் உங்கள் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதை நோக்காகக் கொண்ட Decide.com என்ற தளமொன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.. குறித்த இலத்திரனியல் பொருளை நீங்கள் வாங்கலாமா இல்லை புதிய அறிமுகத்திற்காகக் காத்திருத்தல் உசிதமானதா..விலையிலேற்படக்கூடிய மாற்றங்களிற்கான எதிர்வு கூறல்கள் என உங்களிற்கு ஆலோசனை வழங்கக் கூடியவாறு இந்தத் தளத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் சராசரியாக ஆறு புதிய மடிக்கணனி வகைகள்,ஒரு புதிய வகை புகைப்படக் கருவி ,ஒரு புதிய வகை தொலைக்கட்ட்சியென புத்திது புதிதாக அறிமுமாகிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் நுகர்வோரிற்கு இந்தத் தளம் பெருந்துணையாக இருக்கும்.ஆனால் இத் தளம் பிரபலமானால் இவர்களது விலை எதிர்வு கூறல்கள் பொருட்களின் விலையை, நிரம்பலை செயற்கையாக நிர்ணயிக்கக்கூடிய துர்ப்பாக்கிய நிலையை ஏற்படுத்திவிடும் என விமர்சிப்பவர்களும் உள்ளார்கள்
.
எது எவ்வாறானாலும்  புதிய மொடல்களின் அறிமுகம் பற்றிப் பெரிதாக உடனடியாகத் தெரிந்து கொள்ள முடியாதவர்கள், புதியதொரு இலத்திரனியல் உபகரணத்தினை வாங்கமுற்படுகையில் இந்தத் தளத்தினது எதிர்வுகூறலையும் ஒரு முறை கவனித்துத் தங்கள் தீர்மானங்களை மேற்கொள்வதன் மூலம் ஏற்படக் கூடிய ஏமாற்றத்தினைத் தவிர்த்துக்கொள்ளலாம்..

மேலதிக விரிவான விபரங்களிற்கு இங்கே சொடுக்குங்கள்
tech crunch பதிவிற்கு..