Pages

Subscribe Twitter Twitter

Tuesday, January 3, 2012









நான்.. விவாதம்.. TinTin..


அது.. முகமூடி மாயாவி எங்கள் கல்லூரி வகுப்பறைகளில் பிரபலமாயிருந்த காலம்..நாமெல்லாம் சுழற்சி முறையில் நம்மிடையே இருந்த ராணி காமிக்ஸ்களை ஒருவர் மாறி ஒருவர் பகிர்ந்து வாசித்துக் கொண்டிருந்தோம்..இதனை ஒரு வகையான பண்டமாற்று என்றே கூறலாம்.. 
சில காமிக்ஸ்கள் சுழற்சி முறையில் நம்மை வந்தடைய வாரக் கணக்கில்கூட காத்திருக்க வேண்டி இருக்கும்.இப்படி நம்ம பசங்களெள்லாம் முகமூடி மாயவி மீது வெறிகொண்டலைந்தபோது திடீரென மாணவ முதல்வர்கள் இதனை வாசிக்கக்கூடாதெனக் கூறி பெருமளவு புத்தகங்களை நண்பர்களிடமிருந்து அள்ளிச் சென்றது இப்போதும் ஞாபகம் இருக்கிறது.. ஏன்  வாசிக்கக் கூடாதெனக்கூறினார்கள் என்பதை இன்றுவரை குப்புறப் படுத்திருந்து யோசித்துப்பார்த்தாலும் எந்தக் காரணமும் புரிகிறதில்லை.பின்னர் சிலகாலம் அதனை மறைத்து வைத்து இரகசியமாக வாசித்து வந்தாலும் பழைய வெறித்தனம்.. நாட்டம் அதில் தொடரவில்லை..



பின்னர்..  எமது கல்லுரியில் விவாதம் கொடிகட்டிப்பறந்த காலம்..குமாரசுவாமி மண்டபத்தில் முன்னால் நிலத்தி உட்கார்ந்தபடி அனல் பறக்கும் விவாதங்களிற்கு கைதட்டி குதூகலித்திருந்தபோது.. நாமளும் விவாதத்தில் இறங்கினால் என்ன என ஒரு விபரீதமான நப்பாசை பிறந்தது. (எவண்டா அது பாடம் கடத்த காயாளும் உபாயங்களில் ஒன்றாகவே இவற்றிலெல்லாம்  நமக்கு நாட்டம் வந்தது எண்டு அரசாங்க ரகசியங்களைப் போட்டு உடைப்பது..). ஒரு வழியாய் முட்டிமோதி நம்மளையும் விவாத அணியிலே நம்மளையும் நம்பி இறக்கிவிட்டர்கள்.


நாமளும் ஒரு மாதிரி சமுதாய நலன் அது இதென்று விவாதங்களில் ஏதோ புகுந்து கலக்கிய/கலாய்த்துக்கொண்டிருந்தபோதுதான் நிகழ்ந்தது அந்தவிபரீதம்.ஒரு நாள் இலக்கியத் தலையங்கம்.. நமக்குத்தான் பாடப்புத்தகத்திலுள்ள தமிழ் இலக்கியம் தெரிகிறதே பெரிய விசயம்..  என்ன செய்வதென்றே தெரியவில்லை. நம்ம அணியிலே முதலில் பேசிற இரண்டு பேருமே இலக்கியம் தெரிந்தவங்கள் எண்டதால ஏதோ நமக்குத் தெரிந்த கோயில்களில் சிறுவயதில் பிரசங்கங்களில் கேட்டதெல்லாம் சேர்த்து.. அதோட எப்பவும் குறைகண்டு பிடிக்கிறதில வல்லவன் எண்டிறதாலயோ என்னமோ மூண்டாவதாய் என்னை இறக்கிறவங்கள்.. ஆக எதிரணியிலே அளவுக்கதிகமாகக் குறைகண்டுபிடித்தும், ஒரு மாதிரி எனக்கு தமிழ் இலக்கியமெல்லாம் தெரியாதெண்டிற இரகசியம் வெளியில தெரியாமல் சமாளித்து ஒருமாதிரி வென்றுவிட்டோம்..ஆனா நம்ம நடுவப் பெருந்தகை  இலக்கியக்கருத்துகளுக்கு அப்பால் வெட்டியாடி ஒரு மாதிரி வென்றுவிட்டீங்கள் என்று நம்ம குட்டை தனிப்பட்ட ரீதியில் உரையாடும் போது போட்டு உடைத்துவிட்டார்..இதனால் வீறுகொண்டெழிந்த நாம் தமிழ் இலக்கியத்தைக் கரைத்துக் குடிப்பதென்று முடிவெடுத்து நம்ம கல்லூரி நூலகத்தைத் துழைத்தெடுக்க ஆரம்பித்தோம். சிவகாமியின் சபதம், கடல்புறா என்று நம்மட இலக்கியப்பயணம்(?) சென்றுகொண்டிருக்கையில்தான் எமது நூலகத்திற்கு எதோ வெளிநாட்டுப் பழையமாணவர் சங்கத்தின் அன்பளிப்பு என்று பெருந்தொகையான ஆங்கிலப் புத்தகங்கள் வந்து சேர்ந்தது.

நாம தான் ஆங்கிலக் கதைப்புத்தகங்களின்ர பக்கமே தலை வைச்சுப் படுக்கிறதேயில்லையே..ஆனாலும் நம்ம பசங்க சிலபேர் கலர்கலராய் படங்களோட நம்ம முகமூடி மாயாவி போல புத்தகம் வாசிக்கிறத கண்டபோது ஆர்வமேலீட்டால் வாங்கிப்  படம் பார்த்து..சிறிது சிறிதாய்.. என்ர ஆங்கிலப் புத்தகம் வாசிக்கிறதில்ல எண்டிற சபத்தத்தையே முறியடிக்கச் செய்தது தான் அந்த TinTIn..
சிறிதுகாலம் நம்ம பசங்களை வெறி கொண்டலையச் செய்தது அந்தக் பல வர்ண TinTin புத்தகங்கள்..மழைக்கும் நூலகப்பக்கம் ஒதுங்காத நம்ம பசங்கள் சிலரை நூலக அங்கத்துவம் பெறச்செய்யும் அளவிற்கு நீண்டிருந்தது இந்த TinTIn வெறி.இந்தப் புத்தகங்களை எடுப்பதற்கு பலரும் முண்டையடிக்கவே ..இறுதியாக சுழற்சிமுறையிலே இந்த புத்தகங்கள் வெளியில் செல்ல்லாமல் வாசிப்பதாக முடிவெடுத்து செயலில் இறங்கினோம். அதிலும் சில குழறுபடிகள் ஏற்படவே TinTIn சில புத்தகங்களை எடுத்து வேறுஅலுமாரிகளில் யாரும் எடுத்துவிடாதவாறு ஒழித்துவைக்கத் தீர்மானித்தோம்.இதற்காக நாம் தெரிவுசெய்தது தமிழ் இலக்கியப் புத்தகங்கள் வைக்கும் அலுமாரியைத்தான்.. இப்போது நினைத்தாலும் இந்தச் சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகள் சிரிப்பைத்தான் வரச் செய்கிறது..

பின்னர் செங்கையாழியான், சுஜாதா என எமது ரசனை திரும்பிவிட்டது. அந்த ரசனை இப்போது இணையத்தில் ஏதாவது வாசித்தால் சரி அது தவிர எந்த புத்தகத்தையுமே வாசிப்பதில்லை என ஒடுங்கிவிட்டது.

TinTin வருகையோடு நான் கடற்புறா நாவலை இறுதிப் பாகத்தை வாசிக்காமலே விட்டுவிட்டேன் என்பது ஞாபகத்திற்கு வருகிறது..வாசிக்க வேண்டும் என்று தோன்றினாலும் அநேகமாக கதை மறந்தே போய்விட்டதால் முதலில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்.. ஆனால் என் இயல்பான சோம்பலைக் கடந்து நானாவது அந்த புத்தகத்தையெல்லாம் தேடியெடுத்து எல்லாப் பாகத்தையும் வாசிப்பதாவது என என் உள்மனம் சிரிக்கிறது. அநேகமாக என் உள்மனம் ஜெயித்துவிடும் போலத்தான் எனக்கும் தோன்றுகின்றது. ;-)


3 comments:

amul said...

ஜனா... சபாஷ்.... சரியாக சொன்னாய்.. அந்தநாள் ஞாபகங்கள்...

Mohamed Faaique said...

பதிவு சூப்பர் பாஸ்... என் எழுத்து நடை போலவே இருக்கிறது உங்க எழுத்து நடையும்...

ராணி காமிக்ஸ் மீது மோகம் கொண்டு நாமளும் அலைந்த காலம் உண்டு. இப்போதும் வீட்டில் மலை போல பழைய புத்தகங்கள் உண்டு..

பழைய ஞாஃபகங்களை மீட்டி விட்டது உங்கள் பதிவு

Sukanthan said...

superda!!