![]() |
சாகசத்திற்கு தயாராக நண்பர் குழாம் :D |
எங்கள் யாழ் இந்து 2005 மாணவர்கள் எல்லோரும் ஒன்றுணைந்து கடந்த வருடம் முதல் வருடாந்தம் ஒரு நாள் சுற்றுலாவை ஒழுங்குசெய்து வருகின்றோம்.இம்முறை கித்துள்கல சென்று White water rafting செய்வதாகத் திட்டமிட்டிருந்தோம். முன்பொருமுறை கேதா அண்ணா ஒழுங்கு செய்த கித்துல்கல சுற்றுலா பற்றிய முன்னாள் பதிவர் ;) புல்லட்டின் பதிவொன்றை வாசித்ததிலிருந்து நானும் கித்துல்கல செல்வதற்கான வாய்ப்பை எதிர்பார்த்திருந்தேன்.இதற்கமைய குறுகிய கால முன் அறிவித்தலுடன் முப்பத்திரண்டு நண்பர்களைத் திரட்டி நேற்று கித்துல்கல நோக்கிய எமது சாகசப் பயணத்தை ஆற்றியிருந்தோம்.இம் முறை யாழ்ப்பானத்திலிருந்தும் நண்பர்கள் வந்து இணைந்து கொண்டிருந்தார்கள். பழைய பாடசாலைக்கால நினைவுகளைக் கிளறி ஒரே குறும்பும் கும்மாளமுமாக ஏறக்குறைய இரண்டரை மணி நேரப் பயணத்தின் பின்னர் கித்துல்கலவை அடைந்தோம்.
![]() |
ஆற்றங்கரையில் படகோட்டும் நண்பர்கள் :P |
அங்கே ஆறு அண்மைக்கால பெரு மழையாலோ என்னவோ கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. எங்களுக்கு முன்னமே சில சுற்றுலாப் பயணிகள் பயணத்தை ஆரம்பித்திருந்தார்கள். முதலில் நெறிப்படுத்துனர்கள் துடுப்பு வலிப்பது பற்றியும் அதற்காக அவர்கள் வழங்கும் கட்டளைகளையும் கடைப்பிடிக்கும் நெறிமுறைகளையும் எங்கள் அனைவருக்கும் விளங்கப்படுத்தினார்கள்.
அரைகுறை சிங்களம் தெரிந்த நண்பர்களெல்லாம் அவர்களது சைகைகளைத் தமிழில் மொழிபெயர்த்து ஏனைய நண்பர்களுக்கு தங்கள் சிங்களப் பாண்டித்தியத்தை முண்டியடித்து வெளிப்படுத்தினார்கள் ;). அப்போது நெறிப்படுத்துனர் பாறைகள் நிறைந்த பாரிய அலைகள் போல ஆறு கரை புரண்டோடும் ஓர் அலைக்கிடங்கைக் காட்டி இது போன்று மூன்று பாரிய அலைக்கிடங்குகளைக் கடந்து ஒரு ஐந்து கிலோ மீற்றர் தூரம் பயணிக்க வேண்டும்.அவ் இடங்களில் கொஞ்சம் அவதானமாகக் கடந்தால் பயமில்லைஎன்று வெகு சாதாரணமாகக் கூறிய போதே எங்கள் நண்பர்கள் பலரது இதயத் துடிப்பு வீதம் பலமடங்காக எகிற ஆரம்பித்தது.ஆனால் நெறிப்படுத்துனர்கள் அத்தோடு நிறுத்தாமல் ஆற்றுக்குள் வீழ்ந்துவிட்டால் காப்பாற்றும்வரை எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தல்களை வழங்க ஆரம்பித்தார்கள்.ஏதோ சாதாரண படகோட்டல் என்று சம்மத்தித்து வந்திருந்த நண்பர்கள் தங்கள் உயிர் வாழ்வின் நிலைத்திருப்பின் அவசியத்தை வலியுறுத்தி செல்லமாகக் கடிந்து கொள்ள ஆரம்பித்தார்கள்..எல்லோரது கவனமும் இப்போது உயிர்காப்புக் கவசத்தையும்,தலைக்கவசத்தையும் இறுக்கமாகத் தங்களுடன் பிணைத்துக் கொள்வதிலேயே தீவிரமாகத் திரும்பியிருந்தது.

எங்கள் படகு முன்னால் செல்ல பின்னாலே ஏனைய மூன்று படகுகளும் பின்தொடர எங்கள் சாகசப் பயணம் ஆரம்பித்து சிறிது தூரம் செல்ல நெறிப்படுத்துனர் முதலாவது அலைக்கிடங்கு வருவதைக் காட்டி அதற்கேற்றவாறான சைகைகளைக் குறிப்பிட்டார். பாறைகளிடையே எங்கள் படகு ஏறிப் பாய்ந்து அலைகளுக்கிடையே அலையாடி அதனைக் கடக்கையிலே நாங்கள் அனைவரும் முழுவதுமாகவே குளித்திருந்தோம். சற்றுத் தூரம் கடந்து சென்று ஏனைய படகுகளில் வந்த நண்பர்கள் அலைக்கிடங்கைக் கடக்கும் அழகைக் கண்டு ரசிக்கையில் தான் நாங்கள் எவ்வாறு அந்த அலைக்கிடங்கைக் கடந்தோம் என்பதை அசை போட்டுப் பார்க்கக் கூடியதாயிருந்தது. இவ் அலைக்கிடங்குகளைக் கடக்ககையில் ஒரு திகில் கலந்த சந்தோச கூ ஒலியை சகலரும் அவர்களை அறியாது எழுப்பியது தான் ஆச்சரியப்படத் தக்க ஒற்றுமை.
ஓர் அலைக்கிடங்கை வெற்றிகரமாகக் கடந்ததும் அடி மனதிலிருந்த சகல பயமும் நீங்கி , எல்லோரும் ஓர் அருட்டப்பட்ட குதூகலமான மனநிலையில் இருந்ததோடு மட்டுமல்லாமல் அடுத்த அலைக்கிடங்கு எப்போது வரும் என ஆவலோடு எதிர்பார்த்திருக்கவும் ஆரம்பித்தார்கள்.இவ்வாறே அளவு கடந்த குதூகலத்துடன் எங்கள் பயணம் தொடர்ந்தது.அடுத்த அலைக்கிடங்கையும் வெற்றி கரமாகக் கடந்து வந்து நண்பர்களது படகுகள் அவற்றில் மூழ்கி எழுந்து அலைகளில் எழுந்து கடப்பதை மயிர் கூச்செறிய ரசித்தவாறிருக்கையில்தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. பாறைகளூடு ஊடுருவி அலையில் அடிக்கப்பட்ட படகொன்று ஒரு பாறையுடன் மோத படகு கவிழ்ந்தது.மூன்று நண்பர்கள் ஆற்றினிடையே இருந்த பாறையொன்றில் அலைகளிற்கிடையே உடும்புப் பிடியாகப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தார்கள்.ஏனைய ஒருவன் மிக வேகமாக ஆற்றின் வேகத்தில் அள்ளுண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தான்.எல்லாமே கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்தது.
அதற்கிடையில் அந்த படகில் வந்த நெறிப்படுத்துனர் சுதாகரித்துக் கொண்டு கவிழ்ந்த படகை நிமிர்த்தி சிலரை படகில் ஏற்றியிருந்தார்.ஏனைய மூன்று படகில் இருந்த நெறிப்படுத்துனர்களும் சிறிதும் பதறாது வெகு இயல்பாக நிலைமையை அவதானித்து அங்கிங்கு சிதறித் கிடந்த நண்பர்களை நோக்கி எங்களை படகைச் செலுத்தச் செய்துகொண்டிருந்தார்கள். ஒருவாறாக சிலரை நாங்கள் காப்பாற்றி குண்டுக் கட்டாகத் தூக்கி எங்கள் படகுகளில் போட்டுக்கொண்டிருந்தோம்.அவர்களில் மிகவும் மிரண்டு போய் தத்தளித்துக்கொண்டிருந்த நண்பன் நாங்கள் அருகில் செல்கையில் ஹெல்ப் மச்சான் ஹெல்ப் என்று அந்த அபாய நிலையிலும் ஆங்கிலத்தில் கூக்குரலிட்டான்.இதற்கிடையில் நீச்சல் தெரிந்த நண்பன் ஒருவன் எங்கள் படகை நோக்கி நீந்தி வந்து சேர்ந்திருந்தான். இவ்வளவு நடந்தும் அந்த பாறையில் உடும்புப் பிடியாகத் தொங்கிக் கொண்டிருந்தவர்கள் தொங்கியவாறேயிருந்தார்கள். அவர்களைக் கையைவிட்டுவிட்டு ஆற்றினோட்டத்தில் வந்தால் நாங்கள் காப்பாற்றிக் கரை சேர்க்கலாம் என்பதால் கையைவிட்டுவிடும்படி நாங்கள் பலதடவை கத்தியும் அவர்கள் விடுவதாயில்லை. பின்னர் அவர்கள் தங்கள் கைப்பலத்தை இழந்தோ ஏதோ ஒருவாறு ஆற்றுடன் அடித்துச் செல்லப்பட்டு வரலாயினர். இப்பால் படகில் காத்துக் கொண்டிருந்த நாம் ஒவ்வொருவரை நோக்கி படகை வலித்துச் சென்று அவர்களை தூக்கி எங்கள் படகுகளில் ஏற்றலானோம்.அவர்களில் ஒருவன் வேகமாக அடித்துச் செல்லப்படுவதைக் கண்ட ஏலவே கவிழ்ந்த படகிலிருந்து நீந்தி வந்தேறிய நண்பனொருவன் ஏதோ உள்ளார்ந்த உந்துகையில் அவனை மீட்பதற்காக மீண்டும் நீருக்குள் பாய்ந்தான். அப்போதுதான் எங்களோடிருந்த நெறிப்படுத்துனர் சொன்னான்.. தங்களுக்கு என்ன நீந்திச் சென்று காப்பாற்றத் தெரியாதா ? வீழ்ந்தவர்களுக்கு இதுவொரு திகிலான அனுபவம்.. உங்களைக் கொண்டே படகை வலிக்கச் செய்து அவர்களை மீட்கச் செய்தால்த் தானே உங்களுக்கும் மறக்க முடியாத அனுபவமாய் அது அமையும் என்றும்.. லைவ் ஜக்கெற், ஹெல்மட் எல்லாம் போட்டுள்ள நிலையில் எந்த அபாயமும் இல்லை எனவும் கூறினான்.. அத்துடன் அங்கு இதெல்லாம் தினமும் நிகழ்வது தான் எனவும் ,இதெல்லாம் சகஜம் என்றும் கூறியபோது ஏனோ வடிவேலின் நகைச்சுவை தான் நினைவிற்கு வந்து தொலைத்திருக்க வேண்டும்..ஒருவாறு எல்லோரையும் மீட்டெடுத்த பெருமையுடன் அடுத்த அலைக்கிடங்கையும் கடந்து பயணத்தைத் தொடர்ந்தோம்.
விருதுகள் பல பெற்ற முன்னர் எப்போதோ எடுத்த ஆங்கிலப்படத்திற்காக போடப்பட்ட பாலத்திற்கான சுவடுகளைப் பெருமையுடன் காட்டினான் எங்களுடன் வந்த நெறிப்படுத்துனர்.தொடர்ந்து அமைதியான எந்த சலசலப்புமில்லாத ஆற்றின் பகுதியை வந்தடைந்திருந்தோம்.அங்கே குதித்து நீந்தலாம் என்றது தான் தாமதம் பலர் ஏற்கனவே திகிலில் உறைந்து போயிருக்க சிலர் குத்திகலாயினர். கொஞ்சம் கொஞ்சமாக இந்தத் தொகை அதிகரிக்கலாயிற்று.என்ன கொடுமை என்றால் அந்த இடத்தில் கூட கால் நிலத்தில் முட்ட முடியாத ஆழம். நம்மில் பலர் ஒருவாறு படகைப் பிடித்தவாறும்,உயிர் காப்பு அங்கியின் துணையுடனும் மிதக்கலானோம். கவிழ்ந்த படகிலிருந்த நண்பர்களிடம்(வழமைக்கு அவர்கள் ஏற்கனவே திரும்பியிருந்தார்கள்) அவர்களது அனுபவத்தைக் கேட்பதில் நாமெல்லாம் முந்தியடித்தோம்.பாறையில் உடும்புப் பிடியாகத் தொங்கியவர்களை நாங்கள் கையை விடுமாறு கூறக் கூற தொங்கிக்கொண்டிருந்ததைப் பரிகாசம்செய்ய அவர்கள் அதன் கடினத்தை எமக்கு புரிய வைக்குமுகமாக தன் நிலை விளக்கமளித்தனர். அதிலிருந்த நண்பனொருவன் தனது தொந்தி பாறையில் கொழுவுப்பட்டுக் கொண்டதாகவும், அதனால் தனக்கு அதில் தொங்குவது பெரிய கடினமாயிருக்கவில்லை எனவும், கூறி தன்னைப்போன்று சற்றுப் பருத்த உடலமைப்பு இருந்தால் ஆபத்திற்குதவும் என்றும் கூறி அனைவரையும் சிரிப்பிலாழ்த்தினான்.இவர்களின் அனுபவப் பகிர்வின் பின்னர் பல பேர் தங்கள் படகு கவிழவில்லையே என ஆதங்கப்படத் தொடங்கினர்.பின்னர் அனைவரும் ஒருவாறு ஒருவரை ஒருவர் குண்டுக் கட்டாக படகினுள் தூக்கிப் போட்டு கரையை அடைந்தோம்.
வாழ் நாளில் மறக்கவே முடியாத,கொடுக்கும் பனத்திற்கு பயனுள்ள ஓர் சாகச அனுபவமுள்ள சுற்றுலா சென்ற திருப்தியுடன் இரவு வீடு திரும்பினோம். நீங்கள் சாகசம் மிகு சுற்றுலா செல்ல விரும்பினால் உங்களுக்கு எந்தத் தயக்கமுமின்றி கித்துல்கலவை நாங்கள் சிபாரிசு செய்கின்றோம். யாம் பெற்ற (இ/து)ன்பம் பெறுக இவ் வையகம்.. :P
3 comments:
ஹாய்...
சுற்றுலா பற்றிய விமர்சனமும் முகப்புத்தகத்தில் பதிவு செய்த அனைத்து பதிவுகளையும் பார்த்தேன். செல்லவில்லை என்ற கவலை. ஆனாலும் நண்பர்களின் உறவுப்பாலம் தொடரட்டும். வாழ்த்துக்கள். மீண்டும் 2005 தொடர....
உங்கள் பதிவை ரசித்தேன் ஜனா....!!!
இதற்கு முன்னர் நானும் சென்று அனுபவித்திருப்பதால்.... அங்கு நடந்த இன்ப துன்பங்களை என்னால் ஊகிக்க முடிகிறது...
அருமையான பதிவு... வாழ்த்துக்கள்....!!!
ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.. விரைவில் கித்துல்கல சென்றேஆகவேண்டும்
Post a Comment